search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு வழக்கு"

    • பாஜக அரசு 40 சதவிகித ஊழலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் விளம்பரம் வெளியிட்டது.
    • பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக மாநில தலைவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    பெங்களூரு:

    பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

    எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் ஜூலை 27ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

    வழக்கு பின்னணி: கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மே 5ம் தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. முந்தைய பாஜக அரசு 40 சதவிகித ஊழலில் ஈடுபட்டதாகவும், நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் அந்த விளம்பரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல எனக் கூறி பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.கேசவபிரசாத் மே 9ம் தேதி புகார் பதிவு செய்தார். காங்கிரஸ் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை, பாரபட்சம் மற்றும் அவதூறு பரப்புவதாகவும், பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்ப பெயர் இருப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது. தற்போது மேலும் ஒரு அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் கிருஷ்ணசாமி புகார் அளித்தார்.
    • புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கிருஷ்ணசாமி பதிவேற்றம் செய்தார்.

    சென்னை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை.

    இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.

    மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

    இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார்.
    • சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த வழக்கு மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-

    நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். தமிழ்நாடு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறேன். அரசியல் வாழ்க்கையில் நேர்மையாகவும், பொது மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறேன்.

    இதனால், எனக்கு பொது மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார்.

    இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    தற்போது யூடியூப் சேனலில் எனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

    என்னைப் பற்றி மட்டுமல்ல உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்.

    கடந்த ஜூலை மாதம் ஒரு யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான பார்களை நான் நடத்தி வருவதாகவும், இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறி பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எனக்கு எதிரான வழக்கில் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்ட பாஸ்கர் மர்மமான முறையில் இறந்ததாகவும் பொய்யான தகவலை கூறியுள்ளார்.

    இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக அவர் சுமத்தி வருகிறார். எனவே சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
    • ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை.

    அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த வைக்க மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் விசாரித்தார். இன்று விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    அதேசமயம், ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. தனது மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும்வரை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி ராகுல் காந்தி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

    முன்னதாக, ராகுல் காந்திக்கு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் வாதாடும்போது, நாட்டின் பிரதமரை எதிர்க்கட்சி தலைவர் களவாணி என முத்திரை குத்துவது எதுமாதிரியான மொழி? என கேள்வி எழுப்பினார்.

    • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது.

    சூரத் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி அவர்கள், தனக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நீக்க கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரியும் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை குஜராத் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

    இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இன்று விசாரிக்கவுள்ளார்

    • வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார்.
    • ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாட்னா:

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

    இதேபோல் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பீகார் மாநிலம் பாட்னாவிலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    இந்த வழக்கின் விசாரணைக்காக ஏப்ரல் 12ம் தேதி (இன்று) ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. சூரத் நீதிமன்ற வழக்கில் ராகுல் காந்தியின் சட்டக்குழுவினர் பிசியாக இருப்பதால் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்யும்படி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிரியா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மனுதாரர் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது' என்றார்.

    • தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராகுல் வழக்கறிஞர் வாதம்
    • ஏப்ரல் 15ம் தேதி ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தானே:

    குஜராத் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் ராகுல் காந்தி மீதான மற்றொரு அவதூறு வழக்கு மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார்.

    இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர், ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

    மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால், தனது தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டும், கட்சிப் பணிக்காக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தியின் மனுவுக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் வழக்கறிஞர்  ஆஜராகி, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது அல்ல என்று கூறினார். தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறியதுடன், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    எழுத்துப்பூர்வ அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கும்போது அதற்கு ஏற்ப முடிவு எடுக்கவேணடும் எனவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
    • பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 30 நாட்கள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

    ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது திமுக முழு ஆதரவு அளிக்கும் என பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது என திமுக எம்.பி. டிஆர் பாலு தெரிவித்தார்.

    பாஜக அல்லாத தலைவர்கள் மற்றும் கட்சிகளை ஒழிக்க சதி நடப்பதாகவும், ராகுல் காந்தியை இப்படி அவதூறு வழக்கில் சிக்க வைப்பது சரியல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேள்வி கேட்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வேலை என்று கூறிய கெஜ்ரிவால், நீதிமன்றத்தை மதிப்பதாகவும், ஆனால் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

    எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியல் சாசனம், ஜனநாயகம், அரசியல் மற்றும் நாட்டிற்கு மிகவும் கவலையளிக்கும் விஷயம் என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.

    • திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார்.
    • கார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது.

    அனுப்பர்பாளையம் :

    அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக சேவூர் ஜி.வேலுசாமியும், 12 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் கடந்த (ஆக.15)கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி கூறுகையில், புகாரை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவர், நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால், அவதூறு வழக்குத் தொடருவது என கூட்டத்தில் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்ட போது, புகார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது. ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏற்பதற்கு முன்பாக தொடங்கப்பட்ட பணி. ஊராட்சி மன்றத்தலைவருக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

    • ஸ்மிரிதி இரானி மகள் மது விற்பனை பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார்.
    • சமூக வலைதள பதிவுகளை அழிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

    மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி 18 வயது மகள் ஜோயிஷ் இரானி கோவாவில் நடத்தி வரும் விடுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கூடம் இயங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோஸா ஆகியோர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியில் இருந்து ஸ்மிரிதியை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    தமது மகள் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த மந்திரி ஸ்மிரிதி, மூன்று பேருக்கும் எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் தமக்கும் தமது மகளின் பெயருக்கும் களம் ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்மிரிதி இரானி மற்றும் அவரது மகள் தொடர்பான டூவிட்டர் பதிவுகள், விடியோக்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க வேண்டும் என்று நீதிபதி மினி புஷ்கர்ணா கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதள பதிவுகளை 24 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    • அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    கோபி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அ.தி.மு.க.வில் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக அப்போது அ.தி.மு.க. கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர் ஆனார்.

    இந்த வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    பெண் பத்திரிகயாளர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியான புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #Metoo #MJAkbar
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில்  டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிடிருந்தார்.

    இந்நிலையில், இன்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

    தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக  தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #Metoo #MJAkbar
    ×